கார் ஓட்டுநர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்த குற்றத்துக்காக 72 வயது ஷீ கா யீ (படம்) குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு தெலுக் ஆயர் ஸ்ட்திரீட்டில் 39 வயது திரு ரஃபயல் சோங் யென் பிங் என்பவரின் முகத்தில் ஷீ குத்தினார். சம்பவம் நிகழ்வதற்கு முன்பு தனது பி எம் டபிள்யூ காரை நிறுத்துவதற்காக சாலையில் காத்துக்கொண்டிருந்ததாகத் திரு சோங் தெரிவித்தார். அப்பொழுது அவ்வழியே ஃபெராரி காரில் வந்த ஷீ, திரு சோங்கிடம் அவ்விடத்தை விட்டுப் போகும்படி கத்தியதாகக் கூறப்படுகிறது. மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தமது காரை நிறுத்தி வைத்திருந்ததால் அவ்விடத்தைவிட்டு நகரவில்லை என்று திரு சோங் விளக்கமளித்தார். கோபம் அடைந்த ஷீ, திரு சோங்கை வசை மொழியால் திட்டியதுடன் காரில் இருந்து இறங்கி திரு சோங்கின் முகத்தில் குத்தியுள்ளார்.
அவர் அணிந்திருந்த மோதிரங்கள் திரு சோங்கின் நெற்றியில் பட்டு வெட்டுகாயம் ஏற்பட்டது. ஷீ மீது மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன என்றும் இவை வேறொரு தினத்தன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தாக்குதலின் பேரில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 5,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

