சிலேத்தார் விரைவுச்சாலையில் வாகனம் ஒன்று மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற விபத்தில் 23 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணம் அடைந்தார். புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் நேற்று பகல் 1.33 மணி அளவில் இந்த விபத்துக் குறித்து போலிசுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் விபத்தினால் சுயநினை வின்றி இருந்த மோட்டார் சைக்கிளோட்டியை கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கி ளோட்டிக்கு இதயத்தை துடிக்கச் செய்யும் அவசரகால சிகிச்சை வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. விபத்தினால் ஏற்பட்ட காயங்களினால் மோட்டார் சைக்கிளோட்டி மரணம் அடைந்தார். அவருடன் பின்னிருக்கையில் பயணம் செய்த 22 வயது ஆடவருக்கும் காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது அவர் சுய நினைவுடன் இருந்தார். அவருக்கு இடதுகாலில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. விபத்து குறித்து போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

