வருமான வரித்துறை 'கிராப்', 'ஊபர்' நிறுவன வாகன ஓட்டுநர்கள் மீது தன் பார்வையைத் திருப்பியுள்ளது. சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் இந்த இரண்டு நிறுவனங்களையும் அணுகியிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிறுவனங்கள் 2013 முதல் சிங்கப்பூரில் செயல்படுகின்றன. இவற்றில் 40,000 பேருக்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்கள் வேலை செய்கிறார்கள். தானாகவே இத்தகைய கார் ஓட்டுநர்கள் தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்ய ஓர் ஏற்பாட்டைச் செய்வது இந்த ஆணையத்தின் நோக்கம். வரி செலுத்துவோர் அதற்கான தகவல்களை எளிதாக தாக்கல் செய்ய ஏதுவாக இந்த ஆணையம் தொடர்ந்து பல வழிகளைத் தேடி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஊபர், கிராப் நிறுவனத்துடன் இப்போது ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த வாகனத்தின் கார் ஓட்டுநர்கள் தங்களுடைய வருமானத் தகவல்களை மின்னணு படிவத்தில் பூர்த்தி செய்து தாக்கல் செய்வதை மிகவும் எளிதாக்குவது இலக்கு என்று ஆணையம் விளக்கியது. வருமான விவரங்களை கணினி மூலமாக தாக்கல் செய்யும் முறை இருப்பதால் இந்த இரு நிறுவனங்களின் கார் ஓட்டுநர்கள் வரி செலுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. அதோடு இல்லாமல் தங்கள் வருமானத்தைக் குறைத்துக்காட்டவும் முடியாது.