இம்மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வினாத்தொகுப்பின் மூலம் சுயமதிப்பீடு செய்துகொண்டு, நீரிழிவு அபாயம் உள்ளதாகத் தெரியவரும் இளம் சிங்கப்பூரர்கள் மானிய கட்டணத்துடன் சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்ளத் தகுதிபெறுவர். தாங்கள் நீரிழிவால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறதா என்பதைச் சுயமதிப்பீடு செய்து கொள்ளும்படி சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இளம் சிங்கப்பூரர்களை ஊக்குவித்துள்ளார். 18 முதல் 39 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரர்கள் www.letsbeatdiabetes.sg/dra என்ற இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள 'நீரிழிவு அபாய மதிப்பீடு' வினாத்தொகுப்பைக் கொண்டு தாங்கள் நீரிழிவால் பாதிக்கப்படும் அபாயமுள்ளதா என்பதைக் கண்டறியலாம்.
அப்படி ஒருவேளை நீரிழிவு அபாயமுள்ளதாகத் தெரியவந்தால் மேம்படுத்தப்பட்ட 'ஸ்கிரீன் ஃபார் லைஃப்' திட்டத்தின்கீழ் அவர்கள் அதிகபட்சம் ஐந்து வெள்ளி மட்டும் கொடுத்து சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்ளலாம். செப்டம்பர் 1ஆம் தேதி அறிமுகமானது முதல் இதுவரை கிட்டத்தட்ட 15,000 சிங்கப்பூரர்கள் இந்த நீரிழிவு சுயமதிப்பீட்டுச் சோதனையைச் செய்து கொண்டனர். ஒன் ராஃபிள்ஸ் பிளேசில் நேற்று நடந்த சாலைக் காட்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் கான், "நீரிழிவுக்கு வயது ஒரு முக்கிய காரணம் என நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், நீரிழிவுக்கு வயது மட்டுமே ஒரு காரணம் அல்ல. உங்களது குடும்பப் பின்னணியும் வாழ்க்கை பாணியும் நீரிழிவு அபாயத்தின் முக்கிய காரணிகளாக இருக்கலாம்," என்றார்.

