நண்பர்களோடு வெளியில் சாப்பிடச் செல்லும் சிங்கப்பூரர்கள், போட்டி போட்டுக்கொண்டு சாப் பாட்டுக்குப் பணம் கட்டுவதையும் "எல்லோருக்கும் பிலாஞ்சா" செய்வதையும் அடிக்கடி காணலாம். சிங்கப்பூரில் இது சகஜமான ஒன்றாக இருந்தாலும், வேறிடங் களில் இதுபோல அடிக்கடி நடப்ப தில்லை என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். நண்பர்களுக்கு உணவு வாங்கித் தரும் இப்பழக்கம், சிங்கப்பூரர்கள் ஒருவர்மீது மற்ற வர் அக்கறை காட்டும் வழிகளில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார். "இனம், பன்மயக் கலாசாரம், உலகில் சிங்கப்பூரின் அங்கம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 500 அடித்தளத் தலை வர்களுடன் நடத்தப்பட்ட "காப்பி உரையாடலில்" துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி பகிர்ந்து கொண்ட கருத்துப் பற்றி திரு லீ ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார்.
சிங்கப்பூரில் ஒருவருக்கொரு வர் போட்டிப் போட்டுக்கொண்டு சாப்பாட்டுக்குப் பணம் கட்டுவதைப் போலல்லாமல், வெளிநாடுகளில் பலதரப்பட்டவர்களுடன் சேர்ந்து உணவருந்தச் செல்லும்போது ஒவ்வொருவரும் தத்தம் பங்கைத் தனித்தனியே கட்டுவது வழக்கம் என வெளிநாட்டிலிருந்து வந்தி ருந்த நண்பர் தன்னிடம் கூறியதாக டாக்டர் ஜனில் கூறினார். இந்த உரையாடலின் கருப் பொருளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுவதாகப் பிரதமர் லீ கூறினார்.

