மூன்று போகம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது: ராமதாஸ் கவலை

மூன்று போகம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது: ராமதாஸ் கவலை

1 mins read

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 10 போகம் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டிய நிலையில் 3 போகம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நடப்பாண்டில் மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் குறுவை சாகுபடி பொய்த்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். "தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் மழை பால் வார்த்திருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியை எட்டியுள்ளது.

தொடர்ந்து தண்ணீர் வந்தால் அடுத்த ஒரு வாரத்திற்குள் கர்நாடகத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி விடும். இதனால் சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கத் தேவையான 90 அடி நீர்மட்டத்தை மேட்டூர் அணை சில நாட்களில் எட்டிவிடக்கூடும்," என ராமதாஸ் கூறியுள்ளார். நடப்பாண்டில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் பெற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் குறைகூறியுள்ள அவர், இனியாவது மேட்டூர் அணையிலிருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.