இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகளுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அந்நாட்டு சுற்றுலாத்துறை, பயண நிறுவனங்களுடன் இணைந்து கட்டுப்படியாகும் வகையிலான கவர்ச்சிகர பயணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்திட்டம் இந்த ஆண்டு டிசம்பர் வரை நீடிக்கும். 250 தொகுப்புச் சுற்றுலாத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பவர் களுக்கான படகுக் கட்டணம் பாதியாகக் குறையும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்த மற்ற நாட்களில் பயணத் தொகுப்புத் திட்டங்களுக்கு மொத்தமாகப் பதிவு செய்பவர்களுக்குக் கட்டணம் மேலும் குறையும்.
இதனை இந்தோனீசியச் சுற்றுலாத் துறை அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. பாத்தாம், பிந்தான், தஞ்சோங் பினாங் ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள் குறைந்த செலவில் சிறந்த சேவைகளைப் பெறுவர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சுற்றுலாத்துறையின் தென்கிழக்கு ஆசியப் பிரிவுக்கான இயக்குநர் திரு ரிஸ்கி ஹண்டயாணி கூறுகையில், "சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் சிறப்புச் சேவைகள் வழங்க படகுச் சேவை வழங்கும் நிறுவனங்கள், சுற்றுலா முகவர்கள் ஆகியோருடன் இந்தோனீசியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.

