ஏழாவது மாடியில் உள்ள முதலாளியின் வீட்டில் சன்னலைச் சுத்தம் செய்துகொண்டிருந்த இந்தோனீசியப் பணிப்பெண் தவறி கீழே விழுந்த சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரித்து வருகிறது. தெம்பனிசில் உள்ள கரிஸ்ஸா பார்க் கூட்டுரிமைக் குடியிருப்பில் இம்மாதம் 3ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது. கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து முதலாளி அல்லது பெரியவர் ஒருவரின் மேற்பார்வை இல்லாமல் இல்லப் பணிப்பெண்கள் சன்னலின் வெளிப்பகுதியைச் சுத்தம் செய்ய அனுமதி இல்லை. சன்னல்களில் கிராதிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சன்னலைச் சுத்தம் செய்யும்போது கிராதிகள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கவேண்டும்.
இதற்கிடையே, பணிப்பெண்கள் கீழே விழும் சம்பவங்கள் தொடர்வது கவலை தருவதாக உள்ளது என்று இந்தோனீசியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அண்மைய சம்பவம் குறித்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட அனைவருடனும் தொடர்பில் இருப்பதாகவும் சொன்னார். அச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 20களில் இருந்த இந்தோனீசியப் பணிப்பெண் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

