பயணியைத் தாக்கிய டாக்சி ஓட்டிக்கு ஒரு வாரச் சிறை

பயணியைத் தாக்கிய டாக்சி ஓட்டிக்கு ஒரு வாரச் சிறை

1 mins read

நிர்வாகி ஒருவரின் முகத்தில் குத்துவிட்ட டாக்சி ஓட்டிக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சென்ற ஆண்டு ஜூன் 28ஆம் தேதி மாலை 5.40 மணி அளவில் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் உள்ள டாக்சி நிறுத்தம் ஒன்றில் 37 வயதான திரு பாசு சாந்தனுவைத் தாக்கியதை ஒப்புக்கொண்டார் லிம் கிம் லீ, 42, என்ற அந்த டாக்சி ஓட்டி. திரு சாந்தனுவும் அவருடைய குடும்பத்தாரும் அந்த டாக்சி நிறுத்தத்தில் டாக்சிக்காக வரிசையில் காத்திருந்தனர். அந்த நிறுத்தத்தில் இருந்து டாக்சி வெளியேறும் வழியில் லிம் தமது கிரைஸ்லர் டாக்சியை நிறுத்தி, வாடிக்கையாள ருக்காக காத்துக்கொண்டிருந்தார்.

அதனால், பயணக் கட்டணம் குறைவான சாதாரண டாக்சிக்குச் செல்ல விரும்பியவர்கள் அவரது டாக்சியைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்த வகையில், தமது 59 வயது தாயாருடன் லிம்மின் காருக்குப் பின்னால் இருந்த டாக்சிக்குச் செல்ல விரும்பினார் திரு சாந்தனு. தன் தாயார் நடப்பதற்குச் சிரமப்பட்டதால் டாக்சியைச் சற்று தள்ளி நிறுத்தும்படி லிம்மிடம் சொல்வதற்காக அவரது டாக்சியை விரலால் தட்டினார் திரு சாந்தனு. உடனே டாக்சியை விட்டுக் கீழிறங்கிய லிம், எதுவும் சொல்லாமல் நேராக திரு சாந்தனுவின் முகத்தில் குத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் திரு சாந்தனுவும் அருகில் நின்றிருந்த அவருடைய தாயாரும் நிலைதடுமாறிக் கீழே விழுந்தனர். திரு சாந்தனுவின் நெற்றியில் 3 செ.மீ. நீளத்திற்குக் காயமேற்பட்டது. அவருடைய தாயாரும் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.