ஹவ்காங் பகுதியில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி புளோக்கின் ஐந்தாவது மாடியில் இருந்து பொருட் களை வீசியும் திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த கார்களைச் சேதப்படுத்தியும் குற்றம் புரிந்த 54 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஹவ்காங் அவென்யூ 8, புளோக் 620ல் நேற்றுக் காலை 8.00 மணியளவில் நடந்ததாக வான்பாவ் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஐந்தாவது மாடியில் வசித்து வந்த அந்த ஆடவர் தன் வீட்டு கண்ணாடி சன்னல்களை மேலிருந்து கீழே தள்ளிவிட்டார். அதன் பின்னர் பாத்திரத்தின் மூடியை எடுத்துக்கொண்டு கீழே வந்தார். கீழே நிறுத்தி வைக்கப்பட் டிருந்த குறைந்தது மூன்று கார்களையாவது அந்த மூடியைக் கொண்டு அவர் சேதப்படுத்தினார் என்று தான் அறிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
பெரும் சத்தம் கேட்டதால் வெளியில் எட்டிப்பார்த்த பக்கத்து புளோக்கில் வசித்துவரும் திரு வாங் லைஃபா, அந்த ஆடவர் சமையலறை கண்ணாடி சன்னலை உடைத்ததைப் பார்த்ததாகவும், அச்செயல் பெரும் ஆபத்து என்றதால் உடனடியாகப் போலிசாருக்குத் தகவல் தெரி வித்தாகவும் வான்பாவ் நாளிதழிடம் கூறினார். போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அந்த ஆடவர் கட்டுப்பாடற்ற நிலையில் இருந்தார். போலிசாருடன் சுமார் அரை மணி நேரம் கைகலப்பில் ஈடுபட்ட அந்த ஆடவரை அவர்கள் மடக்கி பிடித்து, கைது செய்தனர் (மேல் படம்). போலிஸ் விசாரணை நடந்து வருகிறது.

