ஒட்டுமொத்த புளோக்குகள் விற்பனையும் நில விற்பனையும் அதிகரிப்பதன் காரணமாக விற்கப்படாத புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்காக உயரக்கூடும் என்று நகரச் சீரமைப்பு ஆணையம் தெரிவித்து இருக்கிறது. ஏற்கெனவே 17,178 தனியார் வீடுகளுக்குத் திட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடுகள் இன்னமும் விற்பனையாகவில்லை.
இந்த நிலையில் மேலும் 16,700 வீடுகள் சந்தைக்கு விலைக்கு வரும் வாய்ப்பும் இருக்கிறது என்று அந்த ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகரச் சீரமைப்பு ஆணையம் தன்னுடைய மூன்றாவது காலாண்டு நிலச்சொத்து புள்ளிவிவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இப்போதுள்ள புளோக்குகளை ஒட்டுமொத்தமாக விற்கும் நடைமுறை கடந்த ஓரிரு ஆண்டுகளில் மிகவும் வேகமாகி யிருக்கிறது. இதன் காரணமாக அந்த இடங்களில் அதிக வீடுகள் கட்டப்படும் என்பதால் புதிய வீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

