கணினியை ஊடுருவி மதிப்பெண் தரநிலையை மாற்றியவருக்குச் சிறை

கணினியை ஊடுருவி மதிப்பெண் தரநிலையை மாற்றியவருக்குச் சிறை

1 mins read

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் ஆசியான் உபகாரச் சம்பளத்துடன் பயின்று வந்த 22 வயது வியட்னாமிய மாணவர் டிரான் ஜியா ஹங் அவரது பேராசிரியரின் கணினிக் கணக்கை ஊடுருவி மதிப்பெண் தர நிலையை மாற்றினார். வர்த்தக நிர்வாகத் துறையில் முதலாமாண்டு பயின்ற அவர், தேர்வு மதிப்பெண் தரநிலையை 'டி+'லிருந்து 'பி'யாகவும் மாற்றியமைக்கப்பட்ட இறுதித் தரநிலையை 'பி'யிலிருந்து 'ஏ'யாகவும் மாற்றினார். அத்துடன், மற்ற மாணவர்களின் மதிப்பெண் தரநிலை களைக் குறைத்தார். தம்மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்துவந்த ஹங், அது கட்டுக்கதை எனவும் குறிப்பிட்டார்.

முனைவர் ராஜா மறைச்சொல்லை மெதுவாகத் தட்டச்சு செய்வதை வகுப்பறையில் இரண்டாவது வரிசையில் அமரும் ஹங், கூர்ந்து கவனித்து மறைச்சொல்லை ஊகித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் 39 குற்றச் சாட்டுகளை எதிர்நோக்கிய ஹங், கணினியை முறை கேடாகப் பயன்படுத்துதல் மற்றும் இணையப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 10 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு 16 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் கணினியை ஊடுருவியதற்கான ஆதாரத்தை தமது கணினியிலிருந்து அழித்து நீதி வழங்குவதற்குத் தடையாக ஹங் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.