தனிநபர் நடமாட்டக் கருவிகள், மின் சைக்கிள்கள் சம்பந்தப் பட்ட தீச்சம்பவங்கள் இவ்வாண்டு அதிகரிப்பதை அணுக்க மாகக் கவனிக்கும்போது அவை மலிவான மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரி விக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதத்தில் இதுபோன்ற மூன்று தீச்சம்பவங்களும் இந்த வாரத்தில் மட்டும் இரு தீச்சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளன. இச்சம்பவங்கள் தனிநபர் நடமாட்டக் கருவிகள், மின் சைக்கிள்கள் ஆகியவை தீ அபாயம் விளைவிக்கும் சாதனங்களாகக் கருதப்படக்கூடும் என்ற அக்கறையை எழுப்பியுள்ளது. மலிவான, தரமில்லாத மின்கலங்களை இணையத்தில் வாங்கும் போக்கு அதிகரிப்பதே இதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.
'கேரோசல்', 'தவ்பாவ்' போன்ற மின் வர்த்தக இணையத் தளங்களில் விற்கப்படும் மின்கலங்களை நூற்றுக்கணக்கானோர் வாங்குகின்றனர் என்றும் சில மின்கலங்கள் ஆக மலிவாக $200க்குக்கூட கிடைக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. தாங்கள் பயன்படுத்தும் தனிநபர் நடமாட்டக் கருவிகள், மின் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் பெற்ற கடைகளிலிருந்து மின்கலங்களை வாங்குமாறு கேட்டுக் கொண்ட போக்குவரத்துக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் அங் ஹிங் கீ, அப்போதுதான் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார்.

