சட்டவிரோதமாக செல்லப்பிராணிகள் கடை நடத்திய குற்றத்திற்காக நேற்று 47 வயது ஆடவருக்கு $2,750 அபராதம் விதிக்கப்பட்டது. டான் லாய் ஹோக் எனும் ஆடவர் ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள தனது வீட்டில் கூண்டுகளில் கிளிகளை வளர்த்து பின்னர் விற்றதாக வேளாண், உணவு-கால்நடை மருத்துவ ஆணையம் தனது அறிக்கையில் கூறியிருந்தது.
முறையில்லாத பராமரிப்பு, உரிமம் இன்றி சட்டவிரோத மாக செல்லப்பிராணிகளை விற்பனை செய்ததை ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறிந்தது. சோதனையில் டானின் வீட்டில் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட 27 கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டன (படம்). இருப்பினும், கிளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. பறவைகள் உட்பட எந்த செல்லப்பிராணியையும் விற்கவேண்டும் என்றால் அதற்கான உரிமத்தைப் பெற்று அதை வாடிக்கையாளர் பார்வைக்கு வைத்திருக்க வேண்டும் என ஆணையம் கூறியது. இதுபோன்ற சட்டவிரோத செல்லப்பிராணி கடை நடத்து வோருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
விலங்குகளின் நலனைப் பாதுகாப்பது என்பது பொது மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும். சட்டவிரோத செல்லப்பிராணிக் கடைகள் அல்லது விலங்குகளுக்கு எதிராக கொடுமைகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து பொதுமக்கள் தங்கள் பங்கை ஆற்றலாம். பொதுமக்கள் ஆணையத்தின் 1800-476 1600 எனும் 24 மணிநேர சேவை அழைப்பு எண்களுக்கோ அல்லது இணையத்தளம் வாயிலாகவோ தகவல்களைத் தெரிவிக்கலாம். "புகைப்படம் அல்லது காணொளிகள் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டால் விசாரணைக்கு உதவியாக இருக்கும். எங்களிடம் வழங்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைத்தி ருக்கப்படும்," என ஆணையம் மேலும் தெரிவித்தது.

