அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தற்காப்பு அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, முக்கிய உரை நிகழ்த்துவார் என்று அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்தது. "31வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின் இறுதியில் உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங், அடுத்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நடைபெறவிருக்கும் 17வது ஷங்ரிலா கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்றுவார்," என்று உறுதிப்படுத்தியதை மேற்கோள் காட்டி ஆய்வுக் கழகம் கூறியது.
பிரதமர் மோடி ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தற்காப்பின் முக்கியத்துவம் பற்றி பேசுவார். அவரது உரையைக் கேட்க இவ்வட்டார தலைவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்று அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழக ஆசியப் பிரிவின் தலைமை இயக்குநர் டிம் ஹக்ஸ்லி தெரிவித்தார்.

