சிட்டி பிளாசாவுக்கு அருகில் ஆயுதமேந்தி கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக 44 வயது சிங்கப்பூரர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். தமது பயணி பேனாக்கத்தியைக் காட்டி தம்மிடம் இருந்து பணம் பறிக்க முயற்சி செய்ததாக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் போலிசாரிடம் டாக்சி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார். சந்தேக நபர் பொங்கோலில் டாக்சியில் ஏறி, சிட்டி பிளாசாவில் இறங்கியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
டாக்சியில் சென்றபோது ஓட்டுநரிடம் தொடர்ந்து பணம் கேட்ட சந்தேக நபர், பின்னர் பேனாக்கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டார். டாக்சி ஓட்டுநர் பணம் கொடுக்க மறுக்கவே, சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அருகில் இருந்த போலிசாரிடம் டாக்சி ஓட்டுநர் உதவி நாடினார். விசாரணைக்குப் பிறகு, அதே நாள் காலை 5.50 மணிக்கு அந்த சந்தேக நபரை போலிசார் கைது செய்தனர். ஆயுதமேந்தி பணம் பறிக்க முற்பட்டது நிரூபிக்கப்பட்டால் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

