கிறிஸ்மஸுக்கு முன்தினம் இரவு நீ ஆன் சிட்டி கடைத் தொகுதியில் பணியில் இருந்த போலிஸ் அதிகாரி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரைத் தாக்கிய ஆடவர் மீது நேற்று அரசு நீதிமன் றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதனுடன் அந்தக் கடைத் தொகுதி ஒன்றில் பணியாற்றிய பாதுகாவல் ஊழியர் ஒருவரையும் தாக்கிய 66 வயது சிங்கப்பூரரான லாம் ஜூன் ஹின் (படம்) மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. போலிஸ் சார்ஜண்ட் ஏட்ரியன் டான் காங் வீ தாக்கப்பட் டது குறித்த மூன்று குற்றச்சாட்டுகளும் பாதுகாவல் அதி காரி பஹாரி மட்சாம் தாக்கப்பட்டது குறித்த இரண்டு குற்றச்சாட்டுகளும் லாமுக்கு எதிராகப் பதிவாயின.
டிசம்பர் 24ஆம் தேதி இரவு 10 மணிக்கு அந்தக் கடைத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பைத் தாண்டிச் செல்ல முயன்ற லாமை, பஹாரி தடுத்து நிறுத்தினார். அப்போது லாம், பஹாரியின் நெஞ்சுப் பகுதியில் கையை வைத்து தள்ளி, பின்னர் அவரது கழுத்தைப் பிடித்தார் என்று அறியப்படுகிறது. இரவு 10.10 மணிக்கு இதனைப் பார்த்த போலிஸ் அதிகாரி டான், அவர்களுக்கு அருகில் சென்று விசாரித் தார். அப்போது லாம், திரு டானின் வலது மணிக்கட்டைப் பிடித்து, அவரது இடது கன்னத்தில் ஒரு குத்து விட்டார். திரு லாமின் வழக்கு இம்மாதம் 30ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.

