தீவு விரைவுச்சாலையில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மேம்பாலச் சாலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி இடிந்து விழுந்தது தொடர்பான விசாரணை தொடர்வதாகப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார். விசாரணை குறித்து பாட்டாளிக் கட்சியின் தொகுதியில்லா உறுப்பினர் டென்னிஸ் டான் லிம் ஃபோங் கேள்வி எழுப்பியிருந்தார். "விசாரணை தொடர்கிறது. விசாரணை நிறைவுபெற்றதும் கண்டுபிடிப்புகள் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துக்கு மதிப்பீட்டுக்காக அனுப்பி வைக்கப்படும்," என்று அமைச்சர் கோ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் விசாரணை அக்டோபர் மாதத்தில் முடியும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் கூறியிருந்தார். இந்நிலையில், விசாரணை அக்டோபர் மாதம் நிறைவுபெறாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விசாரணை எப்போது முடியும் என்றும் குறிப்பிடப்படவில்லை. மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததில் கட்டுமான ஊழியர் ஒருவர் மரணமடைந்தார். பத்து பேர் காயமுற்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து மேம்பாலச் சாலையைக் கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

