காருக்கு அடியில் சிக்கிய சிறுவனை மீட்க பத்து பேர் விரைந்தனர்

காருக்கு அடியில் சிக்கிய சிறுவனை மீட்க பத்து பேர் விரைந்தனர்

1 mins read

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 1ல் நேற்று முன்தினம் நிகழ்ந்த சாலை விபத்தில் காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஒன்பது வயது சிறுவனை மீட்க நாலா புறத்திலிருந்தும் பத்துப் பேர் விரைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று பிற்பகல் 3.50 மணிக்கு பள்ளிச் சீருடை அணிந்திருந்த அச்சிறுவன் 'ஸீப்ரா' சாலைக் கடப்பில் கடக்கும்போது ஒரு கார் அவனை மோதியது என்று ‌ஷின் மின் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது ஓடி வந்த சுமார் பத்து பேர் காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்க காரைத் தூக்க முயற்சி செய்தனர் என்றும் ஐந்து நிமிடங்களுக்குள் சிறுவனை அவர்கள் மீட்டனர் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். கால்களில் காயமுற்ற அச்சிறுவன் கேகே மகளிர், சிறுவர் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். போலிஸ் விசாரணை தொடர்கிறது.