சாங்கி விமான நிலையம் சென்ற ஆண்டில் சாதனை அளவான பயணிகள், விமானங்கள், சரக்குகள் ஆகியவற்றைக் கையாண்டுள்ளது. முனையம் 5ன் கட்டுமானப் பணிகள் போன்ற விரிவாக்கத் திட்டங்களுக்குக் காத்திருக்கும் நேரத்தில், அதிக அளவிலான போக்குவரத்தைக் கையாள தொடர்ந்து தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் மொத்த பயணிகள் போக்குவரத்து ஆண்டுக்காண்டு அடிப்படையில் 6% வளர்ச்சி கண்டு 62.2 மில்லியனாகி உள்ளது என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது. விமானப் போக்குவரத்து 3.5% அதிகரித்து 373,000 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் சரக்கு அளவு 8% உயர்ந்து 2.13 மில்லியன் டன்னாகி இருக்கிறது. சென்ற ஆண்டில் டிசம்பர் மாதம் அதிக பரபரப்பாக இருந்துள்ளது. 5.86 மில்லியன் பயணிகள் கையாளப்பட்டனர். ஆண்டுக்காண்டு அடிப்படையில் இது 3% வளர்ச்சியாகும். சிங்கப்பூர் விமான நிலையத்தைப் பயன்படுத்தும் முதல் பத்து நாடுகளில் இந்தியா முதலிடத்திலும் சீனா இரண்டாமிடத்திலும் உள்ளன. இந்தியாவின் பயன்பாடு 16 விழுக்காடும் சீனாவின் பயன்பாடு 12 விழுக்காடும் அதிகரித்துள்ளன. நகரங்களுக்கிடையிலான தொடர்பில் கோலாலம்பூர் முதலிடத்தில் உள்ளது.

