சிங்கப்பூரர்கள் தங்களது அடுத்த பிரதமர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். அமைச்சரவை மாற்றத்தின்போது புதிய துணைப் பிரதமரை நியமிக்கப் போவதில்லை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட அறிக்கை வரும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று திரு லீ சொன்னார். "புதிய பிரதமரைத் தேர்வு செய்வ தற்குச் சற்று காலம் பிடிக்கலாம் என்பது எனது மதிப்பீடு," என்றார் பிரதமர்.
இவ்வாண்டின் முதல் ஆறு அல்லது ஒன்பது மாதங்களுக்குள் தங்களது தலைவர் யார் என்பதை இளம் அமைச் சர்கள் தேர்வு செய்வர் என்றும் அந்தத் தலைவர் இந்த ஆண்டிற்குள் திரு லீ சியன் லூங்கிற்குப் பிறகு பிரதமர் பொறுப்பை ஏற்கவிருப்பவர் என்று அறி விக்கப்படலாம் என்றும் தாம் நம்புவதாக கௌரவ மூத்த அமைச்சர் கோ சோங் டோங் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்து இருந்தார்.
இது பற்றி திரு லீயிடம் கேட்டதற்கு, "இது மிக முக்கியமான விவகாரம் என்பதை நாமறிவோம் என்று நினைக் கிறேன். குழு, வடிவத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதற்கு அவர்களுக்குச் சற்று கால அவகாசம் தேவை," என்று பதிலுரைத்தார்.
அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குள் அடுத்த பிரதமர் யார் என்பது பற்றி ஒரு முடிவு தெரிந்துவிடும் என உறுதியாகச் சொல்லமுடியாது என்று கூறிய பிரதமர், ஆயினும் அது குறித்த காலத்திற்குள் நடந்தேறும் எனத் தாம் உறுதியாக நம்புவதாகவும் சொன் னார்.

