தமது முதலாளியிடமிருந்து $42,000 திருடிய பெண்ணுக்கு 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இணையம் வழியாக ஒருவரின் அறிமுகத்தைப் பெற்று, அவரை நிரந்தரவாசியான 44 லோக் பியூ லிங் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த நபர் தாம் அமெரிக்காவில் இருப்பதாக லோக்கிடம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான லோக்கை திருமனம் செய்துகொள்ள விரும்புவதாக அந்த ஆடவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
வேலை நிமித்தமாக தாம் நைஜீரியாவுக்குச் சென்றுள்ளதாகவும் அங்கு தமது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் மலேரியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆடவர் லோக்கிடம் இணையம் வாயிலாக தெரிவித்தார். இதையடுத்து, 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதியிலிருந்து 2016ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தமது முதலாளியிடம் செலுத்திய பணத்தை லோக் திருடி தம்மைக் காதலிப்பதாக கூறிய ஆடவரிடம் அனுப்பினார்.
இந்த விஷயத்தைக் கண்டுபிடித்த லோக்கின் முதலாளி போலிசில் புகார் செய்தார். லோக்கின் கணவர் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதாகவும் அவர் வீட்டில் இருப்பதில்லை என்றும் லோக்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

