சிங்கப்பூரில் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் 'நெட்ஸ்' பணம் செலுத்தும் முறை நேற்று பிற்பகல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத் துக்குத் தற்காலிகமாக முடங்கியது. 'நெட்ஸ்' சேவை 1986ஆம் ஆண்டில் தொடங்கியது. பல ஆண்டுகளாக தங்குதடையின்றி சேவை வழங்கி வரும் 'நெட்ஸ்' நேற்று முதல்முறையாக தற்காலிகமாக முடங்கியது. 'நெட்ஸ்' சேவையை நடத்தும் நிறுவனம் சேவைத் தடை குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் தகவல் தெரிவித்தது.
"தற்சமயம் 'நெட்ஸ்' சேவையைப் பயன்படுத்தி பணம் செலுத்தவோ ரொக்க அட்டைகளில் பணம் நிரப்பவோ முடியாது," என்று நெட்ஸ் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கம் குறிப்பிட்டது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவற்றின் பாதுகாப்புக்கு எவ்வித பங்க மும் ஏற்படவில்லை என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் 'நெட்ஸ்' நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
'நெட்ஸ்' சேவையையும் வங்கி களையும் இணைக்கும் இணைப்பு ஒன்று இயங்காததால் சேவைத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதை மீட்டமைக்க வேண்டியிருந்தது. பிற்பகல் சுமார் 2 மணிக்கு முடங்கிய 'நெட்ஸ்' சேவை 3.44 மணிக்கு வழக்கநிலைக்குத் திரும்பியது. சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக 'நெட்ஸ்' நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

