சிறிய, குறைந்த ஆதரவுடன் கூடிய அறநிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் 'சமூக உண்டியல் அறநிறுவன ஆதரவு நிதி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனது 35வது ஆண்டுநிறைவை ஒட்டி இந்தப் புதிய நிதி ஆதரவுத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சமூக உண்டியல் அறிவித்துள்ளது. இதன்மூலம் 2018 முதல் 2021 வரை 60 அற நிறுவனங்களுக்கு நிதியுதவி கிட்டும். ஒவ்வோர் அறநிறுவனத்திற்கும் ஆண்டுக்கு அதிக பட்சமாக $50,000 வரை என ஈராண்டுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
இப்போது சமூக உண்டியல் மூலமாக ஆதரவு பெறாத 'கேம்பஸ்இம்பேக்ட்', 'ஸின் யுவான் கம்யூனிட்டி கேர்', 'டாட்டர்ஸ் ஆஃப் டுமாரோ' உள்ளிட்ட 20 அறநிறுவனங்கள் புதிய திட்டத்தின்மூலம் பலனடையும். தனது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'ஸ்டோரிஸ் ஆஃப் கேர்' எனும் பிரசாரத்தையும் சமூக ஊண்டியல் தொடங்கியுள்ளது. இந்த தேசிய அளவிலான முயற்சியானது, பரிவு குறித்த தங்களது கதைகளைப் பகிர்ந்துகொள்ளும்படி பொதுமக்களை ஊக்குவிக்கிறது.
சிறுகதை, கட்டுரை, கவிதை, ஓவியம், புகைப்படம், விளக்கப்படம் போன்ற முறைகளில் பகிர்வுகள் இருக்கலாம். சமூக உண்டியல் இவ்வாண்டு பிற்பகுதியில் வெளியிடும் நினைவுப் புத்தகத்தில் சிறந்த 35 படைப்புகள் இடம்பெறும். facebook.com/comchest என்ற பக்கத்தில் #StoriesOfCare என்று 'டேக்' செய்தோ அல்லது stories_ of_care@ncss.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ பொதுமக்கள் பரிவு குறித்த தங்களது கதைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

