சுவா சூ காங்கில் $50 கள்ள நோட்டுகளைப் பயன்படுத்தி யதற்காக 21 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு சம்பவங்களில் அவர் அந்தக் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை சுவா சூ காங் ஸ்திரீட் 51ல் உள்ள கடையில் இரண்டு கள்ள நோட்டுகளைப் பயன்படுத்தி உள்ளார். திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் போலிசாருக்குச் சம்பவம் பற்றி புகார் செய்யப்பட்டது. போலிசார் அந்த நோட்டுகளை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
சோதனைக்குப் பின் வர்த்தக விவகாரப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு, பின் அதே சாலையில் திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கைது செய்தனர். அச்சுப்பொறி, மடிகணினி, $50, $100 கள்ள நோட்டுகளில் சில அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு சம்பவத்திலும் ஆடவருக்கு தொடர்பு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ள நோட்டுகளை உண்மை நோட்டுகள் போல பயன்படுத்தி ஏமாற்றியதற்காக அந்த ஆடவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

