போலித் தகவல்களைக் கொடுத்து பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் சம்பவங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் பத்துக்கும் குறைவாகவே நடந்துள்ளதாக கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவ்வாறு போலித் தகவல்களைக் கொடுத்ததற்குக் குற்றம் சாட்டப்படும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை இடம் இருக்கும் வேறொரு பள்ளியில் சேர்க்க நேரிடும் என்று அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப்பினர் டேரல் டேவிட் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
பீஷான் வட்டாரத்தில் பிரபல பள்ளியில் தங்களது பிள்ளையை சேர்ப்பதற்கு தவறான தகவல்களை அளித்த பெற்றொருக்குச் சென்ற மாதம் $9,000 அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சிராங்கூன் கார்டன்ஸில் தனியார் வீட்டில் தங்கிவரும் அந்தக் குடும்பம், பீஷானில் தங்கியிருப்பதாகப் பொய்த் தகவல் அளித்துள்ளனர். பள்ளிக்கு 1 கிலோமீட்டர் சுற்றளவில் தங்கியிருப்பவர்களுக்கான முன்னுரிமையைப் பயன் படுத்திக்கொள்வதற்காக அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

