ஊழலில் ஈடுபடாமல் நேர்மை யுடன் செயல்பட வேண்டும் என்று தெமாசெக் ஹோல்டிங்ஸ் பங்கு வைத்திருக்கும் நிறுவனங்களிடம் அதன் தலைவர் லிம் பூன் ஹெங் வலியுறுத்தியுள்ளார். தெமாசெக் ஹோல்டிங்ஸ் பங்கு வைத்திருக்கும் முக்கிய நிறுவனங் களின் தலைவர்களுடன் திரு லிம் அண்மையில் பேசினார். வர்த்தகத்தில் நல்ல ஆளுமை, நேர்மை ஆகியவற்றைக் கடைப் பிடிப்பது மிகவும் முக்கியம் என்று திரு லிம் தெரிவித்தார். நேர்மையான அரசாங்கம், வர்த்தகம் கொண்ட நாடாக சிங்கப்பூர் உலகளாவிய நிலையில் நற்பெயர் எடுத்திருப்பதை அவர் சுட்டினார். "ஊழலின்றி நேர்மையுடன் இருப்பது நமது நாட்டின் அடையாளம். இந்த நெறி முறையைக் கொண்டு சிங்கப்பூரின் பொருளியலை வளர்த்துள்ளோம்," என்றார் திரு லிம்.
"உலகிலேயே ஊழல் குற்றங்கள் மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்தப் பெருமை தற்செயலாகக் கிடைக்கவில்லை. உங்கள் அனைவரது நிறுவனங்கள் இதுவரை செய்த வர்த்தகத்தை வைத்துதான் இந்த நற்பெயர் கிடைத்துள்ளது. இந்தக் கௌரவத்தைக் கட்டிக்காப்பது நமது பொறுப்பாகும்," என்று நிறுவனத் தலைவர்களிடம் திரு லிம் கூறினார். இந்நிலையில், அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை திரு லிம் மேற்கோள் காட்டினார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றபோதிலும் தெமாசெக் ஹோல்டிங்ஸ் 20 விழுக்காட்டுக்கும் அதிகமாகப் பங்கு வைத்திருக்கும் கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவனத்தைப் பற்றிதான் அவர் பேசினார்.

