குறுகிய தூரம், நீண்ட தூரம் என்றில்லாது எல்லா விமானப் பயணிகளும் ஒரே மாதிரியான புறப்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்துவர் என்று போக்குவரத்து இரண்டாம் அமைச்சர் இங் சீ மெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதுதான் நியாய மாக இருக்கும் என்று அவர் கூறினார்.
நீண்டதூர விமானப் பயணிகளுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கலாம் என்று சுவா சூ காங் குழுத் தொகுதி உறுப்பினர் ஸாக்கி முகம்மது தெரிவித்த யோசனைக்குப் பதில் அளிக்கையில் அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார். சாங்கி விமான நிலையத்திலிருந்து விமானப் பயணம் மேற்கொள்வோர் ஜூலை 1ஆம் தேதி முதல் $13.30 கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு ஸாக்கி அந்த யோசனையை வெளிப்படுத்தினார்.

