வீவக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவருக்கு மூன்று வாரச் சிறை

வீவக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவருக்கு மூன்று வாரச் சிறை

1 mins read

தனது காப்பிக் கடையைச் சோதனையிட வந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக அதிகாரிக்கு சிகரெட் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற 68 வயது ஆடவருக்கு நேற்று மூன்று வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஹெங் ஹெங் காப்பிக் கடை வீவகவின் விதிமுறைகளை மீறியுள்ளதா என்பதை சோதனையிட கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வீவக அதிகாரி முகம்மது ஸுல்கர்னைன் வந்திருந்தார். அவ்வாறு வீவகவின் விதிமுறைகளை மீறுவோருக்கு அபராத அழைப்பாணைகள் கொடுக்கப்படும்.

சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அந்த காப்பிக் கடையின் உரிமையாளரான திரு லாம் கிம் ஹெங், காப்பிக் கடையின் பின்புறத்தில் ஸுல்கர்னைனை அணுகி, மறுமுறை தனது காப்பிக் கடையை சோதனையிட அவர் வரும்போது, அதை தமக்கு முன்கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டே ஒரு பாக்கெட் சிகரெட்டை அவரது கையில் திரு லாம் திணித்தார். ஸுல்கர்னைன் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை. பின்னர் இச்செயல் குறித்து அவர் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் தெரிவித்தார். கடந்த மாதம் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் திரு லாம் மீது லஞ்சம் கொடுக்க முயன்றாக குற்றம் சாட்டப்பட்டது.