முதல் தாக்குதலாக பொய்ப் பிரசாரம் இடம்பெறக்கூடும்

2 mins read

சிங்கப்பூர் மீதான தாக்குதல் முயற்சிகளில் பொய்ப் பிரசார இயக்கம் முதல்படியாக இருக்கக்கூடும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரை ராணுவ ரீதியில் தாக்க முடியாத வெளிநாட்டுச் சக்திகள் சிங்கப்பூர் மீது தாக்குதலைத் தொடுக்க இந்த உத்தியைப் பயன்படுத்த முடியும் என்று திரு சண்முகம் குறிப்பிட்டார். இணையத்தில் பொய்ப் பிரசாரங்கள் வேண்டுமென்றே இடம்பெறுவது பற்றிய பொது கருத்தறியும் கூட்டம் நேற்று தொடங் கியது. அதில் அமைச்சர் கலந்துகொண்டு பேசினார். இணையவழி நடக்கும் பொய்ப் பிரசாரத்தை சிங்கப்பூர் எப்படி முறியடிக்க வேண்டும் என்பது பற்றி விவாதிக்கும் அக் கூட்டம் எட்டு நாட்களுக்கு நடக்கிறது. கல்வித் துறையினர், சட்டத்துறை வல்லு நர்கள், சமயக் குழுவினர் பலரும் அதில் தங்கள் கருத்துகளை குழுவின் முன்னிலை யில் தெரியப்படுத்துவார்கள். இந்த விவகாரம் பற்றி ஆராய்வதற்காக ஜனவரி மாதம் 10 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவுக்குத் நாடாளுமன்ற துணை நாயகர் சார்ல்ஸ் சோங் தலைமை வகிக்கிறார். கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய திரு சோங், இணையத்தில் வேண்டுமென்றே பொய்ப் பிரசாரங்கள் இடம்பெறுவது உலகளவில் கடுமையான ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்றார். சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளும் அதைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். அத்தகைய பிரசாரம் நம்மை பல வெவ் வேறான வழிகளில் பாதிக்கக்கூடிய சிக்க லான ஒன்று என்று திரு சோங் தெரிவித்தார்.

நாடாளுமன்ற இல்லத்தில் நடக்கும் கருத்தறியும் கூட்டத்தில் கொள்கை ஆய்வுக் கழகத்தின் கரோல் சூன், ஷான் கோ, மேத்யூ மேத்யூஸ் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கோ யிஹான், வழக் கறிஞரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீநிவாஸ் ராய், எஸ் ராஜ ரத்தினம் அனைத்துலக ஆய்வுப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் மைக்கல் ரஸ்கா ஆகியோரும் பல சமய அமைப்புகளைச் சேர்ந்த பேராளர்களும் நேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.