சிங்கப்பூர் வாழ்வதற்கு ஆக அதிக செலவுமிக்க நகராக பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஐந்தாவது ஆண்டாக அது இந்த இடத்தில் இருந்து வருகிறது. 'இஐயு' எனப்படும் 'எகனாமிஸ்ட் இன்டலிஜன்ஸ் யூனிட்' என்ற அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு 2018 ஆய்வு மூலம் இது தெரிய வந்துள்ளது. நியூயார்க், லண்டன், லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற நகரங்களைவிட வாழ்வதற்கு அதிக செலவாகும் நகராக சிங்கப்பூர் உள்ளது. இந்த மூன்று நகரங்களும் செலவுமிக்க 10 நகரங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. உலகம் முழுவதும் உள்ள 133 நகரங்களில் 150க்கும் அதிகமான பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு நகரங்களை அந்த ஆய்வு வரிசைப்படுத்துகிறது.
சற்று குறைவான விலையில் வீட்டு உதவிக்கு ஆள் கிடைத்த போதிலும், "ஒரு கார் வாங்கி அதனைப் பயன்படுத்துவதற்கு உலகிலேயே மிகவும் செலவுமிக்க நகராக சிங்கப்பூர் விளங்குகிறது," என்று 'இஐயு' குறிப்பிட்டுள்ளது. ரொட்டி, மதுபானம், சிகரெட், பெட்ரோல் போன்ற பொருட்களின் விலையை அந்த ஆய்வு ஒப்பிடுகிறது. நிர்வாகிகள் தங்களுடைய ஊழியர்களை வெளிநாடுகளில் வேலைக்கு அமர்த்தும்போது அவர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆய்வு வெளியிடப்படுகிறது. ஆய்வில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருப்பது, வட்டாரப் போக்கை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

