ஹாலந்து வில்லேஜ் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத் துக்குப் பின்புறம் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டிருந்த காரில் சுமார் 20 நிமிடங்களுக்கு முன்று மாதக் குழந்தை சிக்கிக்கொண்டது. செய்வதறியாது அந்தக் குழந்தையின் தந்தை ஒரு சுத்தியலைக் கொண்டு காரின் முன்புறக் கதவின் சன்னலை உடைத்து குழந்தையை மீட்டார். இச்சம்பவம் குறித்து தனக்கு நேற்று முன்தினம் காலை 11.50 மணிக்கு தகவல் கிடைத்தது என்று அறிக்கை ஒன் றின் மூலம் தெரிவித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, தனது வீரர்கள் அங்கு சென்று சேர்வதற்குள் காரின் உரிமையாளரான அந்தத் தந்தை குழந்தையை மீட்டு விட்டார் என்றும் குழந்தைக்குக் காயங்கள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டது.
லியன்ஹ வான்பாவ் சீன நாளிதழ் செய்தியின்படி, குழந்தையுடன் இருந்த பணிப்பெண் தவறுதலாக காரின் கதவை மூடிவிட்டார் என்றும் கதவு மூடியதும் அது தானாக பூட்டிக்கொண்டது என்றும் தெரிய வந்தது. தகவல் அறிந்து பதறிப்போன குழந்தையின் பெற்றோர், உதவிக்காக பலரை அழைத்தனர். அதில் ஒருவர் தனது கடையிலிருந்த சுத்தியலை தந்தையிடம் கொடுக்க அவர் அதைக்கொண்டு சன்னலை உடைத்து குழந்தையைக் காப்பாற்றினார்.

