விரைவுச்சாலையில் கார் மோதிய விபத்தில் நால்வருக்குக் காயம்

விரைவுச்சாலையில் கார் மோதிய விபத்தில் நால்வருக்குக் காயம்

1 mins read

காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் (கேபிஇ) கார் ஒன்று அதன் தடத்திலிருந்து விலகி ஓடி டாக்சி ஒன்றின்மீது மோதியதில் 71 வயது டாக்சி ஓட்டுநரும் அவரது மூன்று பயணிகளும் காயமடைந்தனர். டாக்சிக்கு பின்னால் சென்ற மற்றொரு காரும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டது. பார்ட்லி ரோடு ஈஸ்ட் வெளியேறு வழிக்குப் பிறகு கேபிஇ தெம்பனிஸ் விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அன்று மாலை 6.45 மணிக்கு போலிசுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

டாக்சி ஓட்டுநரும் பயணிகளில் ஒருவரான 32 வயது ஆடவரும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். டாக்சியில் இருந்த 34 வயது மாது, ஆறு வயதுச் சிறுவன் ஆகியோர் கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுநர் காரின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததால் அது சறுக்கி அடுத்த தடத்தில் சென்ற டாக்சி மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. விசாரணை தொடர்கிறது.