அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் அரசாங்கம் சாராத அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, தான் டிசம்பர் மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையைத் தற்காக்க தயாராக இல்லை என்று கூறப்பட்டதற்குப் பதிலளித்து இருக்கிறது. சிங்கப்பூரின் சட்ட அமைச்சும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களும் அப்படி கூறியிருப்பது முரணானதாகவும் அபத்தமாகவும் இருக்கிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்தக் கண்காணிப்பு அமைப்பு தன்னுடைய ஓர் அறிக்கை தொடர்பில் கருத்து தெரி விக்கும்படி கேட்டு சென்ற ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அரசாங்கத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும் அந்த அறிக்கையை சென்ற ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தான் வெளியிட்ட தேதி வரை பதில் ஏதும் வரவில்லை என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.
இணையத்தில் பொய்ப் பிரசாரம் வேண்டுமென்றே பரப்பப்படுவது தொடர்பான தெரிவுக் குழுவில், சென்ற வெள்ளிக்கிழமை மக்கள் செயல் கட்சி கொள்கை அமைப்பை பிரதிநிதித்துப் பேசிய செம்பவாங் குழுத்தொகுதி உறுப்பினர் விக்ரம் நாயர், அமெரிக்க அமைப்பின் அறிக்கை வேண்டுமென்றே இடம்பெறும் ஒரு பொய்ப் பிரசாரத்தைப் போன்றது என்று குறிப்பிட்டார். தன்னுடைய கருத்துகளைப் பகிரங்கமாக தற்காப்பதற் காக சிங்கப்பூருக்கு வரவேண்டாம் என்று அந்த மனித உரிமை அமைப்பு முடிவு செய்துவிட்டது என்று பிறகு அறிக்கை ஒன்றில் சட்ட அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

