இணையத்தில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மலேசியாவுடன் கூட்டு சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இணையப் பொய்ப் பிரசாரங்கள் பற்றிய பொது விசாரிப்பு நேற்று நடந்தது. அதில் பட்டத்தொழிலர்கள் இரண்டு பேரும் அரசாங்கம் சாரா அமைப்பைச் சேர்ந்த பேராளர்களும் தங்கள் கருத்துகள், யோசனைகளை முன்வைத்தனர். இளம் தூதுவர்களைப் பயிற்சி கொடுத்து உருவாக்கலாம்.
பொய்ச் செய்திகளை அடையாளம் காண்பது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் போதிக்கலாம். மலேசியா வுடன் சேர்ந்து செயல்பட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டன. சிங்கப்பூர் அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை ஒடுக்க மலேசிய அரசாங்கத்துடன் சேர்ந்து கூட்டு சிறப்புப் பணிக் குழு ஒன்றை அமைக்கலாம் என்று தொழில் முனைவர் ஹாசுருல் ஏ. ஜமாரி தெரிவித்தார்.
பல முனை அணுகுமுறை இடம்பெறலாம் என்று வழக்கறிஞர் அப்துல் ரஹிம் யோசனை கூறினார். அரசு சாரா அமைப்பான 'ரோசஸ் ஆஃப் பீஸ்' அமைப்பின் மூன்று பேராளர்கள், போலி தகவல்களை முறியடிக்கக்கூடிய அறிவையும் ஆற்றலையும் மக்களிடம் ஏற்படுத்தவும் அவர்களுக்குப் போதிக்கவும் மின்னிலக்க விளையாட்டுப் புத்தகம் ஒன்றை உருவாக்க தாங்கள் முயன்று வருவதாக தெரிவித்தனர்.

