சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளில் ஐவரில் ஒருவர் சீனா அல்லது இந்தியாவிலிருந்து வருகின்றனர். இந்த விகிதம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதிவேகமாக வளர்ந்துவரும் உலகின் முன்னணி பயண சந்தைகளான இந்த இரு நாடுகளிலிருந்தும் மேலும் அதிகமானோரை வரவேற்க சிங்கப்பூர் முயற்சி எடுக்கிறது. இந்தியாவிலிருந்து வருவோரின் எண்ணிக்கையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
2013ஆம் ஆண்டு இந்தியாவின் 12 நகரங்களுக்கு 207 விமானச் சேவைகள் இயங்கின. தற்போது 16 நகரங்களுக்கு 240 விமானச் சேவைகள் செயல்படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்குள் உலகின் ஆகப் பெரிய விமானச் சந்தையாக அமெரிக்காவின் இடத்தை சீனா தட்டிச் செல்லும் என்று அனைத்துலக ஆகாயப் போக்குவரத்துச் சங்கம் முன்னுரைத்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது இடத்திலும் அதற்கு அடுத்த நிலையில் இந்தோனீசியா இருக்கும் என்று கூறப்படுகிறது.

