சிங்கப்பூர் பொது மருத்துவமனை அதன் விபத்து, அவசரப் பிரிவின் வசதிகளை விரிவாக்கம் செய் கிறது. அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். புதிய அவசரப் பிரிவுக் கட்டடம் ஒன்றை மருத்துவமனை கட்டு கிறது. இந்தக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் 2023ஆம் ஆண்டில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விபத்து, அவசரப் பிரிவு வசதிகளுக்குப் பதிலாக இந்தப் புதிய கட்டடம் இயங்கும். புதிய கட்டடம் 12 மாடிகளைக் கொண்டிருக்கும். தற்போதைய அவசரப் பிரிவைவிட புதிய கட்டடம் நான்கு மடங்கு அதிக இடம் கொண்டிருக்கும் என்று சிங்கப்பூர் பொது மருத்துவ மனையின் தலைமை நிர்வாகி கென்னத் குவேக் தெரிவித்தார். குறுகியகால மருத்துவப் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்படும். அவசர சிகிச்சை அதிகம் தேவைப்படாத நோயாளிகள் அவசரப் பிரிவிலிருந்து இங்கு அனுப்பப்படுவர்.
தற்போது அந்தப் பிரிவில் 67 படுக்கைகளே உள்ளன. புதிய கட்டடம் பிரதான மருத்துவமனை வளாகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அதே போல புதிய ஊட்ரம் சமூக மருத்துவமனையுடனும் இணைக் கப்படும். புதிய ஏற்பாட்டின் மூலம் மேலும் பல வசதிகளால் நோயாளி கள் பலனடைவர். அதுமட்டுமல்லாது, மருத்துவ மனையில் உள்ள அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் நிபுணத் துவச் சேவையையும் நோயாளிகள் பெற முடியும். அவசரப் பிரிவிலிருந்து நேரடி யாக மற்ற மருத்துவப் பிரிவு களுக்கு நோயாளிகளை மாற்ற புதிய அவசரப் பிரிவுக் கட்டடம் வழி செய்கிறது.
இதனால் நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறையும். சுகாதாரச் சேவைகள் ஒருங் கிணைக்கப்படுவதாலும் மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்படுவதாலும் தேசிய அளவில் நிகழும் சுகாதார நெருக்கடி நிலைகளை சிங்கப்பூர் பொது மருத்துவமனையால் இன் னும் நேர்த்தியாக எதிர்கொள்ள முடியும் என்று புதிய அவசரப் பிரிவுக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் கூறினார்.

