பீஸ் சென்டருக்கு வெளியே சிலர் மோதிக்கொள்வதைக் காட்டும் இரண்டு காணொளிகள் இணையத்தில் இப்போது வலம் வந்தன. ஆனால் அவை சென்ற ஆண்டு நடந்த சம்பவங்களைக் காட்டும் பழைய காணொளிகள் என்று போலிஸ் தெரிவித்துள்ளது. அந்தக் காணொளிகள், 2017 ஆகஸ்ட் 27ஆம் தேதி நடந்த சம்பவங்களைக் காட்டுபவை என்று போலிஸ் உறுதிப்படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் 22 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். 'மீண்டும் மோதல்' என்ற தலைப்புடன் அந்தக் காணொளிகள் பல ஃபேஸ்புக் குழுக்களிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டதை அடுத்து அவை மீண்டும் பரபரப்பாயின. அந்தக் காணொளிகள் ஒரே நாளில் சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர்கள் ஃபேஸ்புக் குழுமத்தில் 24,430 தடவை பகிர்ந்துகொள்ளப்பட்டன.

