அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இம்மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் அனைத்துலக பணநிதியம் மற்றும் உலக வங்கிக் குழுமம் கூட்டத்திலும் ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திலும் பங்கேற்க சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா அமெரிக்கா செல்ல விருக்கிறார்.
அர்ஜெண்டினா தலைமையேற்கும் இரண்டாவது ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் உலக பொருளியலின் வளர்ச்சி வாய்ப்புகள், அனைத்து நாடுகளின் வளர்ச்சியை யும் உள்ளடக்கக்கூடிய தொழில்நுட்ப மேம்பாடுகள் பற்றிய கொள்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கள் விவாதிப்பார்கள்.
பயணத்தின் ஒரு பகுதியாக குமாரி இந்திராணி நியூ யார்க் நகரத்தில் கட்டமைப்பு வசதிகள் நிதி நிறுவனங் களின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆசியாவில் கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளும் உத்தேச வர்த்தக வாய்ப்புகள் பற்றி பேசுவார். குமாரி இந்திராணியுடன் நிதி அமைச்சு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் செல்கின்றனர்.

