சிங்கப்பூரில் தாதிமை விடுதிகளை நடத்தும் ஆகப்பெரிய நிறுவனமான ஆரஞ்ச் வேலி நர்சிங் ஹோம்ஸ் நிறுவனம், தான் ஸ்டார்ஹப், எஸ்டி இன்ஜினியரிங் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து முதியோரைப் பராமரிப்பதற்கான தொழில்நுட்பங்களைப் பரிசோதித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. ஊழியர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதும் மருந் தகப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதும் இந்த முயற்சியின் நோக்கம் என்று அந்த நிறுவனம் அறிவித்து இருக்கிறது. முதியவர்கள் கீழே விழுந்து விடுவதைத் தடுக்கும் முறை ஒன்றை ஆரஞ்ச் வேலி நிறுவனம், ஸ்டார்ஹப் நிறுவனத்துடன் சேர்ந்து சோதித்துவருகிறது.
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனத்திற்கும் ஸ்டார்ஹப் நிறுவனத்திற்கும் இடையில் ஜனவரி மாதம் கையெழுத்தான ஓர் உடன்பாட்டின் கீழ், சுகாதார பராமரிப்புத் துறையில் ஸ்டார்ஹப் விரிவடைகிறது. அதன் ஓர் அங்கமாக இது இடம்பெறுகிறது. இதர சில தொழில்நுட்பங் களும் பரிசோதிக்கப்படுகின்றன. பாலஸ்டியரில் இந்த நிறுவனம் தன்னுடைய முதலாவது அறிவார்ந்த தாதிமை இல்லத்தை நேற்று திறந்தது. சுகாதார மற்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆரஞ்ச் வேலி நிறுவனம் 'இன்வெஸ்ட் ஹெல்த் கேர்' என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இன்வெஸ்ட் ஹெல்த் கேர் நிறுவனத்தை 2017 ஏப்ரலில் எஸ்பிஎச் வாங்கியது.

