பாதசாரி ஒருவரைத் தாக்கிய மின்சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. இயூ கிம் மிங் என்ற அந்த சைக்கிளோட்டி, ஹவ்காங் அவென்யூ 7ல் சென்ற ஆண்டு மே 18ஆம் தேதி தன் மின்சைக்கிளில் மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. இடைப்பட்ட வேகத்தில் சென்றார். அப்போது வழியில் சிலர் நடந்து சென்றுகொண்டிருந் ததைப் பார்த்து ஒலி எழுப்பினார். திரு சாங் யோங் பியோ, 69, என்ற முதியவரைத் தன் சைக்கிளில் அந்த நபர் கடந்து சென்றபோது திரு சாங் வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பை இயூ மீது இடித்துவிட்டது. திரு சாங்தான் தன்னைத் தாக்குகிறார் என்று நினைத்த இயூ, சைக்கிளைவிட்டு கீழே இறங்கி திரு சாங்கை நோக்கி சத்தம்போட்டார்.
ஏன் என்று தெரியாமல் திரு சாங், என்ன பிரச்சினை என்று அவரைக் கேட்டார். அப்போது திடீரென திரு சாங்கை, இயூ தாக்கத் தொடங்கினார். சாங்கிற்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. நெஞ்சில் வலி ஏற்பட்டது. குற்றங்களை இயூ ஒப்புக்கொண்டார். சொந்த விவகாரங்களைக் கவனிக்கவேண்டி இருப்பதால் தண்டனையை இரண்டு வாரம் ஒத்திவைக்கும்படி இயூ கேட்டுக்கொண்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இயூ, மே 18ஆம் தேதி தானே நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

