கட்டணங்களைச் செலுத்தும் சேவைமுறைகளை வழங்கும் 'நெட்ஸ்' நிறுவனம் புதிய தொடர்பில்லா ரொக்க அட்டையை நேற்று அறிமுகப்படுத்தியது. தற்போது நடைமுறையில் உள்ள துணைக்கோள அடிப்படையிலான மின்னியல் சாலைக் கட்டண முறைக்கு அது நிகரானது. புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை 2020ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும். வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் பொருத்தப் பட்டுள்ள இரண்டாம் தலைமுறை 'ஐயு' கருவிகளை மாற்ற ஏற்படும் செலவை அரசாங்கம் ஏற்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
தற்போது பயன்படுத்தப்படும் இரண்டாம் தலைமுறை 'ஐயு' கருவி களிலும் புதிய 'ஐயு' கருவி களிலும் புதிய தொடர்பில்லா ரொக்க அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய தொடர்பில்லா ரொக்க அட்டையைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகள் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை யும் மின்னியல் சாலைக் கட்டணங்களையும் செலுத்தலாம். புதிய ரொக்க அட்டை $10க்கு விற்கப்படும். அதில் ரொக்க மதிப்பு $5ஆக இருக்கும்.

