உள்ளூர் கார் சவாரிச் செயலியான 'ரைட்' நேற்று அறிமுகமானது. 'கிராப்' போன்ற கார் சவாரிச் சேவைகளுக்குப் போட்டியாக 'ரைட்' களமிறங்கியுள்ளது. நேற்று தனது சேவையைத் தொடக்கிய 'ரைட்' நண்பகலுக்குள் 1,000 கார் சவாரிச் சேவைகளை வழங்கியதாக அதன் தலைமை நிர்வாகி டெரன்ஸ் சோ கூறினார். "இது ஒரு நல்ல துவக்கம். எங்கள் நிறுவனம் வளர்ச்சி பெற இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று நம்புகிறேன். இந்த ஆண்டிறுதிக்குள் கார் சவாரிச் சந்தையில் பத்து விழுக்காட்டினை எங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். இந்த இலக்கு எட்டக்கூடியது எனக் கருதுகிறோம்," என்று திரு சோ கூறினார்.
இந்த 'ரைட்' செயலியை ஒரு கார் பகிர்வுச் செயலியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார் திரு சோ. தற்போது இந்த கார் சவாரிச் சேவை சந்தையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கால்பதித்த 'கிராப்' ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் 'ஜுக்னூ', இந்தோனீசியாவின் 'கோ=ஜெக்', மலேசியாவின் 'டாக்சீ' சிங்கப்பூரின் எம்விஎல் ஆகிய நிறுவனங்களும் சிங்கப்பூரில் கார் சவாரிச் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளன.

