மலேசியாவின் ஏழாவது பிரதமராக நேற்று முன்தினம் பதவியேற்ற டாக்டர் மகாதீர் முகம்மதுவைத் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு நேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் லீ சியன் லூங். நேற்று பிரதமர் லீ வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் மகாதீர், அவரது அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். அதில் டாக்டர் மகாதீரை கோலாலம்பூரிலோ அல்லது சிங்கப்பூரிலோ விரைவில் சந்திக்கவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை அமைக்கும் பணியில் டாக்டர் மகாதீர் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகத் தமது பதிவில் குறிப்பிட்ட திரு லீ, 20 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் மகாதீருடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கும் விதத்தில் மலேசியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி டாக்டர் மகாதீருடன் பணிபுரிய பிரதமர் லீ விரும்புவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது. நேற்று முன்தினம் இரவு டாக்டர் மகாதீர் மலேசியப் பிரதமராகப் பதவியேற்றதும் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

