நடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்

2 mins read
7eddfa3b-ebba-4dee-8ef0-f8438eb37cc0
-
multi-img1 of 2

தமிழ்ப்பற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதே உலகத் தமிழர் மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும் என்று பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழை அடுத்த தலைமுறையினர் எளிதாகக் கற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று அவர் தெரிவித்தார். திருக்குறள் உட்பட இதர காப்பி யங்களுக்குத் தெளிவுரைகள் பல உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை இன்னும் இளைய தலைமுறைக்கு ஏற்றதாக இல்லை என்ற கருத்தை அவர் முன்வைத்தார். கதை, சிறுகதை, கேலிச்சித்திரம் போன்ற வடிவங்களில் விளக்கங்கள் உருவாக்கப்பட்டால் அவர்களுக்குச் சுலபமாகச் சென்று சேரும் என்பது அவரது கருத்து.

சிங்கப்பூர் உட்படப் பல வெளி நாடுகளில் தமிழ்ப்பற்றை மேம்படுத்த தமிழகத்தைவிட முயற்சிகள் மேலோங் கியுள்ளதாகக் கூறிய திரு சரத்குமார், உலகில் உள்ள அனைத்துத் தமிழர் களும் வீட்டில் தமிழில் பேசி தமிழ்மொழியை வளர்க்கவேண்டும் என்று அவர் கூறினார். மாநாட்டில் பாப்புவா நியூ கினி நாட்டின் 'வெஸ்ட் நியூ பிரிட்டன்' மாநில ஆளுநரின் துணைவியார் திருமதி சசிந்தரன் முத்துவேல் கலந்துகொண்டு பேசினார்.

தமது குடும்பத்தின் வரலாற்று சம்பவங்களை வருகையாளர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர், தமிழ் மொழியில் வெளியில் சென்று யாரிடமும் பேசுவதற்கான சூழ்நிலை இல்லை என்றாலும் வீட்டில் தினமும் தமிழில் பேசுவதாகக் குறிப்பிட்டார். இன்று சிறந்த வாழ்க்கை தங்களுக்கு அமைந்தாலும் பல சிரமங்களைக் கடந்து வந்ததாக அவர் குறிப்பிட்டார். மிகக் கடினமான சூழ்நிலை யில் எல்லாம் பாரதியார், பாரதி தாசனின் கவிதைகள் தமக்கும் தமது கணவருக்கும் மனதிற்கு இனிமையாக அமைந்ததை அவர் பகிர்ந்துகொண்டார். அந்தச் சூழ்நிலையில் தமிழ் ஒரு மொழியாக இல்லாமல் தாயாக மாறியது என்று உருக்க மாகக் கூறினார். கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் ஏறத்தாழ 40 நாடுகளைச் சேர்ந்த 500 தமிழர்கள் கலந்துகொண்டனர்.

உலகத் தமிழர் மாநாட்டில் தமது உரையின்போது பல பரிந்துரைகளை முன்வைத்த பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு சரத்குமார். தமிழ்ப் பற்றை மேம்படுத்த தமிழகத்தைவிட பிற நாடுகளில் பல முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். படம்: இர்ஷாத் முஹம்மது