கடந்த இரண்டு மாதங்களில் பத்து புகார்களைப் பெற்ற புதுப்பிப்பு நிறுவனம் ஒன்று, நிதி பிரச்சினைகளால் முடங்கியுள்ளதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 17க்கும் மே 23க்கும் இடையே, ரெக்பினா என்ற நிறுவனத்திற்கு எதிராக அந்தப் புகார்கள் செய்யப்பட்டன. புதுப்பிப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும் பல மாதங்களாக அவை தள்ளிவைக்கப்பட்டன என்றும் புகார்கள் குறிப்பிடுகின்றன. அந்தப் பணிகளுக்கு, மொத்தமாக $101,000 தொகை கொடுக்கப்பட்டது என்று பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.
349 பிடோக் ரோடில் இருந்த அந்த நிறுவனத்தை இப்போது யாராலும் தொடர்புகொள்ள இயலவில்லை. அதன் ஃபேஸ்புக் பக்கமும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது. இவ்வாறு, ஒப்பந்தங்களின்படி வேலைகளை நிறைவு செய்யாமல் வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனம் ஒன்று மாயமானது முதல்முறையன்று. வேலியன்ஸி என்டர்பிரைஸ் என்ற மற்றொரு நிறுவனம், பல்லாயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பணிகள் தொடர்பில் புகார்கள் பெற்றதைத் தொடர்ந்து, தொடர்பில்லாமல் போனது.

