ஷியர்ஸ் அவென்யூவில் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலுக்கு அடுத்துள்ள மின்னியல் சாலைக்கட்டண வாயிலுக்கு அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய நான்கு கார்களில் பயணம் செய்த மூன்று குழந்தைகள் உட்பட எழுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் கறுப்பு நிற ஆடி கார் ஒன்று தலைகுப்புறக் கவிழ்ந்திருந்தது.
வெள்ளி நிற டொயோட்டா கார் ஒன்றும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இளையர்கள் சிலர் சாலை ஓரத்தில் காத்திருந்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. சென்ட்ரல் பொலிவார்டுக்குச் செல்லும் பாதையில் ஷியர்ஸ் அவென்யூவில் நான்கு கார்கள் சிக்கிய சாலை விபத்து குறித்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை குறிப்பிட்டது.
24 முதல் 30 வயதுக்குட்பட்ட நால்வர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் நான்கு முதல் ஆறு வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவ மனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. டொயோட்டா கார் தடம் மாற முயற்சி செய்தபோது ஆடி கார் அதன் பக்கவாட்டில் இடித்ததாகக் கூறப்பட்டது.

