அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோன் உன்னுக்கும் இடையே இம்மாதம் 12ஆம் தேதியன்று உச்சநிலை மாநாடு நடைபெற இருக்கிறது. சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டுக்குத் தயாராகும் வகையில் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் காங் கியூங் வாவும் தொலைபேசி வழி நேற்று கலந்துரையாடியதாக தென்கொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பகுதியாக்கவும் அங்கு நீண்டகாலத்துக்கு நீடிக்கும் அமைதி நிலையை ஏற்படுத்தவும் நடைபெற இருக்கும் உச்சநிலை மாநாடு மிகவும் முக்கியமான தொன்று என்ற அடிப்படையில் உச்சநிலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் திருவாட்டி காங்கும் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளனர்.

