சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் நேற்று முன்தினம் கருகிய வாடை வீசியதற்குப் புகைமூட்டம் காரணம் அல்ல என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. மாறாக, தூசிக் குவியலே அந்த வாடைக்குக் காரணம் என அது நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெளிவுபடுத்தியது. தாம்சன், தோ பாயோ, பீஷான் வட்டாரக் குடியிருப்பாளர்கள் நேற்று முன்தினம் வீசிய கருகிய வாடையை நுகர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அதனால், புகைமூட்டம் மீண்டும் வந்துவிட்டதோ என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
காற்றின் தரத்தைச் சோதித்து மதிப்பிடவும், மாதிரிகளைச் சேகரித்துச் சோதனைக் கூடத்துக்கு அனுப்பவும் தோ பாயோ லோரோங் 1, 6 ஆகிய இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், காற்றின் தரத்தை அதிகாரிகள் பரிசோதித்ததில் அது வழக்கமான நிலையில் இருந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது. வட்டாரத்தில் எந்தப் பகுதியிலும் எரியும் இடங்கள் காணப்படவில்லை என்றும் வாரியம் தெளிவுபடுத்தியது.

