விமானங்களின் கோளாறு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கிட்டத்தட்ட 500 பயணிகள் சாங்கி விமான நிலையத்தில் நேற்று சுமார் ஆறு மணி நேரம் அவதிப்பட்டனர். பேங்காக் செல்ல வேண்டிய SQ972 விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் வேறு விமானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் காரணமாக ஐந்து மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதத்திற்குப் பின்னர் அந்த விமானம் நேற்று பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. பாதிக்கப்பட்ட விமானத்தில் மின்சார வேகக் கட்டுப்பாட்டுப் பிரிவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக எஸ்ஐஏ பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
இயன்றவரை கோளாற்றைச் சரி செய்யும் பணி நடைபெற்றதாகவும் ஆனால் அதற்குப் பலன் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதன் காரணமாக அதில் செல்ல வேண்டிய 313 பயணிகளும் வேறொரு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக அந்த பெண் அதிகாரி கூறினார். முன்னதாக பாதிக்கப்பட்ட விமானத்தில் ஏராளமான இயந்திர பாகங்கள் மாற்ற வேண்டி இருந்ததாகப் பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட் டதென்று பெயர் குறிப்பிட விரும்பாத பேங்காக் பயணி கூறினார்.

